ஸ்ரீதேவி மாஹாத்மியம் ஓர் அறிமுகம்
"கலெள சண்டி வினாயகெள" அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை
வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும்
விநாயகருமே ஆவார்கள்.
துர்கா
பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி
தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700
ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி
மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது
மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்)
வருகிறது.
சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.
சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.
சாந்தனவீ,
புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம்,
துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர்
எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும் பாஸ்கர
ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.
டாமர
தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி
கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு
புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.
யக்ஞங்களில்
எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில்
ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ
பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு
எடுத்துரைக்கிறார்.
"யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா " என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது.
அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.
இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாக கூறுவர்.
தான்
நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே
துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த
மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும்
காட்டில் சந்திக்கின்றனர்.
இருவரும்
கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில்
அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே
ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என
வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே
இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின்
தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே
என்பதையும் விளக்கி கூறினார்.
ஒரு
சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில்
ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள்
தோன்றினர். பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை கடலில் ஆடும் போது கேட்டு அது
தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின்
தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற
வரத்தை பெற்றனர்.
பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார்.
பின்பு
விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல
முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம்
மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும்
என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார். இதனால்
தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக
கூறத் தொடங்குகிறார்.
இப்படி
13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப
வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி
சிவனையே தூதராக சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற
சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன்
மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.
அவரின்
அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும்
பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான்,
வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ
மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால்
அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால்
களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை
ஆராதிக்கிறோம்.
இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.
முறையாக
குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம்
செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து
ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக
முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள
வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய
அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது
தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13
என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக்
கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல்
ஜபித்தல் சிறந்தது.
இவ்வாறு
குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து
ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர
மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப
நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள்,
ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள்.
இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.
ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத்
கருத்துகள்
கருத்துரையிடுக