பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

தரிசிக்க முக்தி தரும் தலம்.

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் தலம்.

மனித உடலின் அமைப்பை குறிக்கும் வகையில் கோயில் அமையப்பெற்ற தலம்.

இறைவன் உருவமாகவும், அருவுருவகவும், அருவமாகவும் ஒரே கோயிலில் காட்சி தரும் தலம்.

கோயில் என்று சொன்னாலே அது இந்த தலத்தையே குறிக்கும் என்னும் புகழ் பெற்ற தலம்.

அர்த்த ஜாமத்தில் உலகில் உள்ள பெரும்பாலான லிங்கங்களின் சிவகலைகளும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்.

நித்தமும் அன்னாபிஷேகம் நடைபெறும் தலம், இதனால் அன்னக்ஷேத்திரம் என புகழ் பெற்ற தலம்.


ஒரே இடத்தில நின்று பிரம்மா, விஷ்ணு மற்றும் பரமேஸ்வரர் ஆகியோரை தரிசிக்க இயலும் தலம்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் க்ஷேத்ரபாலராக அருள் செய்யும் தலம்.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் கிடைத்த தலம்.

274 தேவாரத் திருத்தலங்களில் முதன்மையான தலம்.

பெரியபுராணம் அரங்கேறிய தலம்.

எட்டு திசைகளிலும் எட்டு சாஸ்தா அருள்ப்புரியும் தலம்.

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம்.

ஆறு ஆதார தலங்களில் இருதய தலம்.

ஐந்து சபைகளை கொண்டு பெரும் புகழோடு விளங்கும் தலம்.

கோயிலின் பெயரே ஊரின் பெயராக வழங்கும் தலம்.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மற்றும் மாணிக்கவாசகர் முறையே கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு வாயில் வழியாக வந்து ஈசனை தரிசித்த தலம்.

இப்படி எண்ணற்ற பெருமைகளை தன்னகத்தே கொண்டு பூலோக கைலாயமாக, சிவ தலங்களில் ரத்தினமாக ஜொலிக்கும் தலமே சிதம்பரமாகும்.

சிதம்பரம் கோயில் 

 சித் + அம்பரம் = சிதம்பரம். சித் என்றால் ஞானம். அம்பரம் என்றால் 
வெட்டவெளி அல்லது ஆகாயம். ஞானவெளியில் இறைவன் ஆகாயமாக 
அதாவது அருவமாக விளங்கும் இடம் என்பது சிதம்பரத்தின் பொருளாகும்.
 இதுவே பின்னர் ஊரின் பெயராகவும் வழங்கலாயிற்று. திருச்சிற்றம்பலம்
 என்பதே சிற்றம்பலம் என்றாகி பின்னர் சிதம்பரம் என்று மருவியது என்பது ஒரு சாரரின் கருத்து.                  

                  அலையார் புனல் சூடி ஆகத்தொரு பாகம்
                  மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
                  சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத் 
                  தலையால் வணக்குவர் தலை ஆனார்களே


என்று திருஞானசம்பந்தர் சிதம்பரநாதரை போற்றி வணங்குகிறார்.

இவ்வளவு சிறப்பு பெற்ற இத்தலத்தின் மூலவர் கூத்தபிரான் என்றழைக்கபடும் ஸ்ரீநடராஜ பெருமான் என்றே பலரும் நினைகிறார்கள்.

ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வதர்க்கு பல காலம் முன்பே ஈசன் இங்கு சுயம்பு மூர்த்தமாக தில்லை வனமாக திகழ்ந்த இந்த தலத்தில் ஆதிமூலநாதராக அருள் புரிந்து வருகிறார்.



எப்பொழுது இங்கு இறைவன் எழுந்தருளினார் என்பது யாரும் அறியாதது, ஆதியில் இந்த உலகில் ஈசனே உவந்து எழுந்தருளிய தலமே தில்லையாகும். இங்கு இருக்கும் லிங்க மூர்த்தியே இவ்வுலகில் உள்ள பெரும்பாலான லிங்க மூர்த்திளுக்கு மூலமானவர். அதனாலே தான் அவரை ஆதிமூலநாதர் எனவும் மூலட்டனாதர் எனவும் அழைக்கின்றனர்.

உலகிலுள்ள பெரும்பாலான சிவன் கோயில்களின் சிவ கலைகளும் சிதம்பரம் அர்த்தஜாம பூஜையின் போது இந்த ஆதிமூலநாதரிடமே வந்தடைவதாக ஜதிகம்.
எனவே இவரை தரிசித்தால் உலகிலுள்ள பெரும்பாலான சிவன் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனை தரிசித்த பலன். இவரே சிதம்பரம் கோயிலின் மூலவர், நடராஜர் அல்ல. இவரை வணங்கிய பின் தான் நடராஜரை தரிசிக்க வேண்டும்.

குறிப்பு : அனைத்து சிவன் கோயில்களின் சிவ கலைகளும் சிதம்பரம் வருவதாக கூறாமல் உலகிலுள்ள பெரும்பாலான சிவன் கோயில்களின் சிவ கலைகள் என்று சொல்லியிருப்பதை கவனித்தீர்களா? ஆம், சிதம்பரம் வந்தடையாத சில கோயில்களின் சிவ கலைகளும் உண்டு. அதைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம் :)

அப்படியானால், நடராஜர் எப்படி இங்கே எழுந்தருளினார். அதை தெரிந்து கொள்வதற்கு முன் நாம் மாத்யந்தினரை தெரிந்து கொள்ள வேண்டும். 

யார் இந்த மாத்யந்தினர்? அடுத்த பதிவில் பார்க்கலாம்...


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை