பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 7

ஒரு சமயம் உயர்ந்த ஒரு யாகத்தை நடத்த விரும்பிய பிரம்ம தேவர் அதை நடத்திக் கொடுக்க மிகச் சிறந்த வேதியர்களை தேடினார். சிவ கணங்களே வேதியராக விளங்கும் தில்லை மூவாயிரரை யாகத்தை நடத்திக் கொடுக்குமாறு விண்ணப்பித்தார். அதை ஒரு நிபந்தனையோடு ஏற்று கொண்டார்கள் தில்லை மூவாயிரர்.

அப்படி என்ன நிபந்தனை ? யாகம் முடிந்தவுடனே தங்களை தில்லை அனுப்பி விட வேண்டும். நராஜருக்கு ஒரு நாள் கூட பூஜை செய்யாமல் இருக்க முடியாது என கூறி விட்டார்கள். இதை ஏற்று கொண்ட பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு போய் அவருடைய யாகத்தை நடத்தினார்.

யாகமும் சிறப்பாக நடந்து முடிந்ததும், யாகத்தை நடத்திக் கொடுத்த தில்லை மூவாயிரரை உணவருந்திச் செல்லுமாறு வேண்டினார். ஆனால் நடராஜரை பூஜிக்காமல் உணவருந்த மாட்டோம் என்று வேதியர்கள் உறுதியாக கூறி விட்டனர். மிகுந்த துக்கமடைந்த பிரம்மா சர்வேஸ்வரரிடம் சரணடைந்தார். 

உடனே யாக குண்டத்தில் மிக அற்புதமான தேஜஸூடன் நடராஜர் காட்சியளித்தார்.
 
 

யாகத் தீயில் ஜோதி ஸ்வருபமாக இருந்த பரமேஸ்வரரை ஹோமத் திரவியங்களான பால், தேன் மற்றும் சந்தனத்தைக் கொண்டு அபிஷேகித்தனர் தில்லை மூவாயிரர் . இவர்கள் செய்த அபிஷேகத்தினால் குளிர்ந்தது யாகத் தீ. அப்போது யாக குண்டத்தினுள்ளே ஒளி வீசிய சிலையை கண்டனர்.

மாணிக்க கல்லாலான நடராஜர் சிலையே அது. நடராஜர் தரிசனமும் பூஜையும் ஆகிவிட்ட படியால் பிரம்மாவின் வேண்டுகோளை ஏற்று அங்கே உணவருந்தினர் தில்லை மூவாயிரர். பிறகு அவர்கள் தில்லை திரும்பும் பொழுது மாணிக்க நடராஜரை அவர்களிடமே கொடுத்தனுப்பினார் பிரம்மா. இந்த நடராஜரை இரத்தின சபாபதி என்றும், மாணிக்க மூர்த்தி யென்றும் அழைப்பர்.

சித்சபையின் உள்ளே  நடராஜருக்கு கீழே வெள்ளிப் பெட்டியில் மாணிக்க மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். தினமும் காலை பத்து மணியளவில் இவருக்கு சித்சபைக்கு வெளியே யாகத்தில் உதித்த போது எவ்வாறு பால், தேன், மற்றும் சந்தனம் கொண்டு அபிஷேகித்தனரோ அதே திரவியங்களை கொண்டு மட்டுமே அபிஷேகிக்கப்படுகிறது.
 
 

அபிஷேகம் முடிந்து தீபாரதனையின் முடிவில் தீபத்தை மாணிக்க நடராஜரின் பின்புறம் காண்பிக்கும் பொழுது, செக்கச் சிவந்த மாணிக்கமூர்த்தியின் அழகை தரிசிக்கலாம்.

சித்சபையில் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மட்டும் ஆறு கால பூஜைகள் நடப்பதில்லை. நடராஜருக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவு முக்கியத்துவம் இன்னொரு மூர்த்திக்கும் உண்டு. அவரை நடராஜரை தரிசிப்பது போல எப்பொழுதும் தரிசிக்க முடியாது. 

ஏனென்றால் இவரும் எப்பொழுதும் ஒரு வெள்ளிப் பெட்டியின் உள்ளே நடராஜருக்கு மிக அருகிலே இருக்கிறார். நித்யபடி இவருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. உலகில் வேறெந்த சிவாலயங்களிலும் இப்படி நித்தமும் அன்னாபிஷேகம் நடப்பதில்லை. அதனால் தான் சிதம்பரத்தை அன்ன ஷேத்திரம் என்றழைக்கிறார்கள். அவர் தான் அழகிய திருச்சிற்றம்பலமுடையார்.
 
அழகிய சிற்றம்பலமுடையார் என்று தமிழில் அழைக்கப்படும் மூர்த்தியை சமஸ்கிருதத்தில் சந்திரமெளலிஸ்வரர் என்றழைக்கின்றனர். சந்திரனுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதால் தான் இப்படி ஒரு பெயரே. 

ஒரு சமயம் ஆதிசங்கரர் கைலாயத்திற்கு சென்று பார்வதி பரமேஸ்வரரை தரிசித்தார். அவர் திரும்புகையில் ஈஸ்வரன் தன் முடியை அலங்கரிக்கும் பிறை சந்திரனிலிருந்து அமுத கிரணங்களை துளிகளாக விழ செய்ய அவை ஐந்து ஸ்படிக லிங்கங்களாக உருப்பெற்றது. அவை முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என்பனவாகும். இந்த ஐந்து லிங்கங்களையும் பரமஸ்வரன் ஆதி சங்கரரிடம் கொடுத்தனுப்பினார்.
 
 

அவற்றில் முக்தி லிங்கத்தை கேதார்நாத்திலும், வரலிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கத்தை சிதம்பரத்திலும், போக லிங்கத்தை கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கத்தை காஞ்சீபுரத்திலும் பக்தர்களின் தரிசனத்திற்காக அமைத்தார். சந்திர கிரணங்களிலிருந்து அமையப் பெற்றதால் இந்த ஐந்து லிங்கங்களும் சந்திரமெளலிஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

சித்சபையின் உள்ளே மற்றொரு விஷேஷமான மூர்த்தியிருக்கிறார். பல நூற்றண்டுகளுக்கு முன்பு வரை இரவு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு இவர் முன்பு வில்வ இலைகளும், தாமிர தகடும் வைத்து விட்டு தீக்ஷிதர்கள் வீட்டுக்கு செல்வார்களாம். அப்படி சமர்பிக்கப்பட்ட வில்வ இலைகளும் தாமிர தகடும் அடுத்த நாள் தங்கமாக மாறி இருக்குமென ஒரு செவி வழி செய்தி.
 
 

இவர் தான் ஸ்வர்ணாகர்ஷண பைரவர். எல்லா சிவன் கோயிகளிலும் தA &னிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் பைரவர் இற்கு சித்சபையின் உள்ளே சிவகாமி அம்பாளுக்கு அருகில் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். 

நடராஜருக்கு நடக்கும் ஆறு கால பூஜையில் ஒரு காலம் இவருக்கும் பூஜை நடக்கும். விஷேஷ நாட்களில் நெய்யினால் சுட்ட வடைகளினால் மாலை அணிவிக்கப்படும்.
 
 
 
நடராஜர் வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே சித்சபையிலிருந்து வெளியே வருகிறார். அதிலும் இரண்டு முறை தான் கோயிலை விட்டு வெளியே வருவார். அப்பொழுது பிரதோஷம் மற்றும் பிற விழாக் காலங்களில் வெளியே வந்து அருளைப் பொழிவது யார்?
 
 

இப்படி பக்தர்களுக்கு விழாக் காலங்களில் காட்சி கொடுக்கவே சித்சபையின் உள்ளே ஸ்ரீ சந்திரசேகரர் வீற்றிருக்கிறார். இவரே மற்ற விழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாக வெளியே வந்து சிறப்பிக்கிறார்.

சித்சபை மற்றும் ஆதிமூலட்டனாதரை போலவே சிறப்பு பெற்ற இன்னொரு மகத்துவம் மிக்க இடத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம் :) 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை