பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 3

ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிஷேஷன் மீது பள்ளி கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணன் இயல்புக்கு மாறாக மிக அதிகமாக கனக்கத் தொடங்கினார். ஆதிஷேஷன் தன்னுடைய ஆயிரம் முகங்களாலும் ஸ்ரீஹரியை உற்று நோக்கினார். இனம் காண முடியாத ஆனந்த பரவசத்தில் ஸ்ரீமன் நாராயணர் திளைப்பதை கண்டு வியப்புற்றார்.  ஆர்வத்தை அடக்க முடியாமல் ஸ்ரீஹரியிடமே இந்த ஆனந்தத்திற்கும் உடல் கனம் கூடியதற்கும் காரணத்தை வினவினார். 

அதற்கு பதிலளித்த விஷ்ணு "அனந்தா, முன்னொரு சமயத்தில் பரமேஸ்வரர் தாருகாவனத்தில் ஆடிய ஆனந்த தாண்டவத்தை நினைத்து பார்த்தேன். அந்த பரமானந்த அனுபவத்தாலேயே என் உடல் எடை அதிகமாயும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்பட்டது" எனக் கூறினார்.

இதை கேட்ட ஆதிஷேஷன் தனக்கு அந்த திவ்ய சரிதத்தை கூறுமாறு பகவான் நாராயணனிடமே விண்ணப்பிக்க, அவர் தாருகாவனத்தில் நிகழ்ந்ததை அனந்தாகிய ஆதிஷேஷனுக்கு மகிழ்வுடன் சொல்லத் தொடங்கினார்.

தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களும் அவர்களின் பத்தினிகளும் தாங்கள் செய்யும் வேள்விகளின் பயனாகவே தேவர்கள் சக்தி பெறுகின்றனர் அதனாலேயே இவ்வுலகு இயங்குகிறது எனவும் இதில் இறைவனின் பங்கு ஏதுமில்லை என்றும் எண்ணம் கொண்டனர். இவர்களின் அகந்தையை அழித்து நல்வழிக்கு திருப்ப திருவுள்ளம் கொண்டார் பரமேஸ்வரன்.

சர்வேஸ்வரரின் திருவுளப்படி திருமால் மோகினியாக உடன் வர, ஈசனோ சர்வலோக சுந்தரனாக பிக்ஷாடனராக கோலம் தரித்து தாருகாவனத்தில் நுழைந்தனர்.

தாருகாவனத்தில் மஹாதேஜஸ்விகளாக ஈசன் பிக்ஷாடனராகவும், விஷ்ணு மோகினியாகவும் ரிஷிகளின் ஆசிரமம் இருக்கும் பகுதியில் நடக்கத் தொடங்கினர். பிக்ஷாடனரின் சுந்தர ரூபத்தைக் கண்டு ரிஷிப் பத்தினிகளும், மோகினியின் அழகைக் கண்டு ரிஷிகளும் தன்நிலை மறந்து அவர்கள் பின் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து தங்கள் நிலை உணர்ந்தவர்கள் இதை அவமானமாக எண்ணி கடும் சினம் கொண்டனர். தங்கள் தவவலிமையை கொண்டு மதம் கொண்ட யானையை ஈஸ்வரனை நோக்கி ஏவினர். 

மிகப்பெரிய அந்த யானை தும்பிக்கையை தூக்கி பிளிறிக் கொண்டு சிவனை நோக்கி ஓடி வந்தது. யானையின் வாய் குகை போன்று திறந்திருக்கவே, பரமேஸ்வரர் தாவி யானையின் வாயில் புகுந்து வயிற்றுக்குள் சென்று விட்டார். ஈசன் இவ்வாறு செய்தவுடன் ஸகல தேவர்களும், அம்பிகையும் விக்கித்து நின்றனர். சிறிது நேரத்தில் பரமேஸ்வரன் யானையின் வயிற்றைக் கிழித்து மஹாஉக்ரமாய் வெளியே வந்தார். இந்த ஸ்வரூபமே கஜஸம்ஹார மூர்த்தியென்று அழைக்கப்படுகிறது. தமிழில் யானை உரித்த பெருமான் என்றழைக்கப் படுகிறார்.

சிவபெருமான் நிகழ்த்திய மிகச்சிறந்த 8 வீர செயல்கள் நடந்த தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்ப்படுகிறது. யானையை உரித்த லீலை நடந்த இடம் இன்றைக்கு வழுவூர் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் கஜ ஸம்ஹார மூர்த்தியை தரிசிக்கலாம்.

ஈசனின் உள்ளங்காலை இந்த தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.

மதம் கொண்ட யானையை சர்வேஸ்வரன் வென்றதை கண்ட முனிவர்கள் கடும் சினம் கொண்டு ஒரு புலியை ஏவினர், ஈசன் ஒரு விளையாட்டு போல புலியை வதைத்து அதன் தோலை இடையில் கட்டினார். பின்னர் பலவித நாகங்களை ஏவினர் முனிவர்கள், அனைத்து நாகங்களையும் எடுத்து ஆபரணமாக சூடிக்கொண்டு நாகாபரணர் ஆக காட்சி தந்தார். முனிவர்கள் ஏவிய அக்னி மற்றும் மந்திர மானை தன் பின்னிரு கைகளில் ஏந்தினார் விஸ்வநாதர்.

அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த ரிஷிகள் தங்கள் சக்திகள் அனைத்தையும் திரட்டி முயலகன் என்னும் அசுரனை உருவாக்கி ஈசனை வதம் செய்ய அனுப்பினர். கடும் சினம் கொண்ட ஈசன் ஊழிக்காலத்து சம்ஹார ருத்ரரை போல முயலகன் மீது நின்று ஊர்த்தவ தாண்டவம் ஆடினார். ஈசனின் சினம் கண்டு திருமாலே ஒரு கணம் கலங்கினார். நிலைமையை அறிந்த ஈசன் சாந்தம் கொண்டு ஆனந்த தாண்டவம் ஆடினார்.

ஸர்வேஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பதி முக்கோடி தேவர்களும், யக்ஷ, கந்தர்வ , கிம்புருடர்களும், ஸப்த ரிஷிகளும், தேவ முனி நாரதரும், மற்றைய தெய்வங்கள் அனைவரும் தாருகாவனத்தை அடைந்தனர். நந்தி மிருதங்கம் வாசிக்க, மஹா விஷ்ணு மத்தளம் கொட்ட, வாணியும் நாரதரும் வீணை மீட்ட என அனைவரும் பரமேஸ்வரரின் ஆனந்த தாண்டவம் கண்டு பூரித்தனர்.

தங்களின் தவறை புரிந்து கொண்ட தாருகாவனத்து ரிஷிகளும் ஈசனை தஞ்சம் அடைந்தனர். கருணாமூர்த்தியான பரமேஸ்வரன் அவர்களுக்கும் அனுக்கிரகம் புரிந்தார். இப்படி தாருகாவனத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்த்தியது மார்கழி திருவாதிரை ஆகும்.
இந்த சரிதத்தை விஷ்ணுவிடமிருந்து கேட்டறிந்த அனந்தன் தானும் ஈஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தைக் காண உபாயம் சொல்லுமாறு வேண்டினார்.

மஹாவிஷ்ணுவின் பதில் அடுத்த பதிவில் :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை