பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 6

சிதம்பர ரகசியம்:

சிற்சபையில் எழுந்தருளியிருக்கும் நடராஜருக்கு வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய சாலரம் (ஜன்னல்). இதை சிதம்பர ரகசிய பீடம் என்றழைக்கிறார்கள்.   இங்கே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ மாலைகள் தொங்குவதை காணலாம். இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் அழைப்பார்கள்.

திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இறைவன் என்பது தான் சிதம்பர ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலைகள்'  தொங்கும்  காட்சி மட்டுமே தெரியும்.

இறைவன் அருவமாக இருப்பதை பாமரர்களான நமக்கு உணர்த்தவே வில்வ தள மாலைகள் அங்கு தொங்குகின்றன. ரகசியம் இறைவன் ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இதனால் தான் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது. 

புராணங்கள்  சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள். இந்த சிதம்பர ரகசியத்தை  திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால் நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம்.

 திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும். இந்த தத்துவத்தை உணர்த்துவதே சிதம்பர ரகசியமாகும்.

இறைவன் அருவமாக இருப்பதை சிதம்பர ரகசிய பீடத்திலும், இறைவன் உருவமாக இருப்பதை சித்சபையில் நடம் புரியும் நடராஜாவாகவும் மற்றும் இரத்தின சபாபதியாகவும் மற்றும் இறைவன் அருவுருவாக இருப்பதை லிங்க ரூபமாக திருமூல நாதராகவும் ஒரே கோயிலில் தரிசிக்க கூடிய தலம் சிதம்பரம் ஆகும்.

ஆம், அது யார் இரத்தின சபாபதி? அடுத்த பதிவில் பார்க்கலாம் :) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை