கம்பருக்கு அருள் செய்த கதிராமங்கலம் வனதுர்க்கை!


ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ

துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே


பாரெங்கும் தன் அருட்பார்வையால் படியளக்கும் பராசக்தி வானவர் தானவர் கிங்கரர் கிம்புருடர் யக்ஷ்ர் மற்றும் மனிதர்களின் துயர் துடைக்கவே துர்க்கையாக வடிவம் கொண்டாள். துர்க்கை நேரடியாக பராசக்தியிடம்ருந்து ஒரு ஸ்வரூபமாக வெளிபடவில்லை மாறாக எந்த அம்பிகையின் சக்தியை கொண்டு மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் கீர்த்தியை அடைந்தார்களோ அந்த சக்தியெல்லாம் 
ஒன்று திரண்டு துர்க்கையாக வடிவம் கொண்டாள்.

இவளையே தேவி மஹாத்மியம் சண்டி என்று அழைக்கிறது. ஒரு நொடி பொழுதில் பல்லாயிரகணக்கான சக்தி சேனையை உருவாக்கி அசுர சேனையை நைய புடைத்தவள்.



கலெள சண்டி வினாயகெள என்ற வாக்கியம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கணபதியும் துர்க்கையாகிய சண்டியும் விளங்குகிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. அதனால் தான் அனைத்து சிவாலயங்களிலும் வடக்கு கோஷ்டத்தில் அன்னைக்கு சந்நிதி உண்டு. இத்தனை சிறப்பு பெற்ற துர்க்கைக்கு ப்ரத்யேகமான ஆலயங்கள் சில உள்ளன. அன்னை துர்க்கை தன் மனமுவந்து கொலுவீற்றிருக்கும் ஸ்தலமே கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி ஆலயமாகும்.

எண்ணிலடங்கா அசுரர்களை வதைத்து நமக்கு சாந்தியளித்த பரமேஸ்வரி தன் மனம் மகிழ தேர்ந்தெடுத்த ஸ்தலமே சிவமல்லிகா வனம் என்கிற கதிராமங்கலமாகும். இந்த வனத்திலே தேவி தவம் புரிந்திருக்கிறாள். இங்கிருந்து காசிக்கு தினமும் சென்று கங்கையில் நீராடிவிட்டு மீண்டும் இங்கு வந்து தவம் மேற்கொள்கிறாள் மாதவச்செல்வி. அதனால் தான் இன்றும் அம்பிகையின் மேலிருக்கும் விமானத்தில் ஒரு துவாரமுள்ளது. இதன் வழியே துர்க்கை தினமும் காசிக்கு சென்று கங்கையில் நீராடிவிட்டு வருவதாக ஐதீகம், இதனால் இவள் ஆகாச துர்க்கைன்றும் அழைக்கப்படுகிறாள்.

சிவ பூஜைக்காக மலர் பறிக்க வந்த ராகுவே அன்னையை அடையாளம் கண்டு முதலில் பூஜித்திருக்கிறார். ராகுவே அன்னையை இங்கு ஸ்தாபித்தாக ஐதீகம். அதனாலேயே இது ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் தான் அன்னை முன்புறம் துர்க்கையாகவும் பின்புறம் சர்ப்ப தோற்றத்திலும் காட்சி தருகிறாள். இன்றும் அம்பிகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் இந்த சர்ப்ப தரிசனத்தை காணலாம்.

தன் மகன் மார்க்கண்டேயனுக்கு அற்ப ஆயுள் என்பதையறிந்த மிருகண்டு முனிவர் தாளா துயரடைந்து பல்வேறு ஸ்தலங்களுக்கு தீர்த்தயாத்திரை மேற்க்கொண்டார். இறுதியாக சிவமல்லிகா வனம் என்கிற இந்த கதிராமங்கலத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை தரிசிக்க தன் மகன் மார்க்கண்டேயனுடன் வந்தார். தள்ளாத வயதின் காரணமாக அம்பிகையை தரிசிக்குமுன் மயங்கினார். தண்ணீர் எடுப்பதற்காக மார்க்கண்டேயன் அருகில் உள்ள நீரோடைக்கு சென்றார். இந்நேரத்தில் அம்பிகையின் கரத்தில் இருந்து வியர்வை முத்துக்கள் வடிய அதை மிருகண்டு முனிவரின் முகத்தில் தெளித்தாள். மூர்ச்சை தெளிந்த மிருகண்டு முனிவர் துர்க்கையின் அருளாடலை எண்ணி வியந்து தன் மனக்குறையை கூறி வருந்தினார்.

கருணா ஸாகரமான பரதேவதை உடனே திருக்கடவூர் சென்று அம்ர்தகடேஸ்வரரை பற்றி கொள்ள சொல்லி அசரிரீயாக மிருகண்டு முனிவருக்கு அனுக்கிரஹித்தாள். அதன்படி செய்து பரமேஸ்வரன் யமனை சம்ஹரித்து மார்க்கண்டேயனுக்கு  சீரஞ்சீவி வரமளித்தது ஜகம் புகழும் புண்ணிய கதையாக விளங்குகிறது. இதனால் திருக்கடவூரில் தரிசிப்பவர்கள் இந்த அன்னையை தரிசித்தால் தான் பூரண பலன் கிட்டும். இன்றும் அம்பிகைக்கு அர்ச்சனை செய்யும் பொழுது அவளுடைய கரங்களில் வியர்க்கும் அதிசயம் நிகழ்கிறது.

பார்வதி பரமேஸ்வரர் திருமணத்தை காண தேவர்களனைவரும் வடதிசையில் குவிந்ததால் பூமியை சமன் செய்ய பரமேஸ்வரர் உத்தரவுப்படி அகத்தியர் தென்திசை நோக்கி பயனித்தார். வழியில் விந்தியன் ஆணவம் கொண்டு பாதையை மறைக்க அகத்தியர் இந்த வனதுர்க்கையின் அருளால் விந்தியனின் ஆணவத்தை அழித்தார். பின்பு அகத்தியர்  இங்கு வந்து சில காலம் தங்கியிருந்து துர்க்கையை பூஜித்து மகிழ்ந்தார்.



ஆதியில் இத்தேவி கோயில் ஏதுமின்றி மழையிலும் வெயிலிலுமே இருந்திருக்கின்றாள். பார் புகழும் கம்பராமயணத்தை இயற்றிய கம்பரின் இஷ்ட தேவதை இந்த துர்க்கையே ஆவாள். ஒரு நள்ளிரவில் கடும் மழை பெய்து கம்பரின் கூரை சேதமடைந்து தண்ணீர் ஒழுகியது. தாயே நீயே மழையிலும் வெயிலிலும் இருக்கிறாய், உன் அருள் மழை என்னைக் காக்கும் என்று கூறிவிட்டு உறங்கி விட்டார். விடிந்தவுடன் கண் விழித்து பார்த்தால் அவருடைய கூரை நெற்க்கதிர்களால் வேயப்பட்டிருந்தது. பக்தி மேலீட்டால் அன்னையை பலவாறு பாடி பரவிய கம்பர் அன்னையை கதிர் வேய்ந்த மங்கள நாயகி, கதிர் தேவி என்று அழைத்தார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது. 

சகல தேவர்களனைவரிடதிலும் இருக்கும் சக்தியே இங்கு அன்னையாக இருப்பதினால் இங்கு வேறு எந்த மூர்த்திகளுக்கும் சந்நிதி கிடையாது, விநாயகர் உள்பட. 

அன்னையின் எழில் கோலம் வார்த்தைகளால் வடிக்க இயாலாதது, இங்கு தரப்பட்டிருக்கும் புகைப்படங்களில் அன்னையின் செளந்தர்யம் 5% தான் தெரிகிறது, நேரில் தரிசித்தவர்க்கே நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பது தெரியும்.நான்கு கரங்களோடு அன்னை மலர்ந்த முகத்தினளாய் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். பொதுவாக சில பெருமாள் கோயில்களில் நாரயணர் ப்ரயோக சக்கரத்துடன் காணப்படுவார், உதாரணமாக குருவாயுர் கிருஷ்ணர், ஆனால் இங்கு துர்க்கை ப்ரயோக சக்கரத்துடன் இருக்கிறாள். ப்ரயோக சக்கரத்துடன் இருக்கும் தெய்வங்கள் பக்தர்களின் துயரை உடனே களைந்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.



எல்லா துர்க்கையும் மகிஷம் மீதே நின்று அருள் புரிய பார்த்திருக்கிறோம், ஆனால் இங்கு வனதுர்க்கை மஹாலக்ஷ்மி ஸ்வரூபமாக செல்வத்தை அள்ளித் தருபவளாக தாமரை மலர் மீது நிற்கிறாள்.

ஊரே வெயிலால் தகித்தாலும் அன்னை இருக்குமிடம் எப்பொழுதும் சிலு சிலுவென்று இருக்கிறது. கோயிலினருகே ஒரு சிறு நீரோடை ஓடுகிறது. சுற்றிலும் பசுமையான மரம் செடி மற்றும் கொடிகளோடு எழிழ் தவளும் இடத்தில் வனதுர்க்கை அருளாட்சி நடத்துகிறாள்.

குண்டலக்காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமெனும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே!

என்று திருமூலர் பாடி பரவிய சண்டிகா பரமேஸ்வரியான துர்க்கையை 
ராகு காலத்தில் நெய் தீபமேற்றி வழிபட தீராத துயரெல்லாம் தீர்த்து வைப்பாள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை