மரகதவல்லி மீனாக்ஷி!



எந்த பராசக்தியின் பெருமையை ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதிசேஷனாலும் முழுமையாக எடுத்து கூற இயலாதோ, அந்த பராசக்தியின் அருட்பெருங்கருணையை ஒரு துளியேனும் விவரிக்க முழுமுதற் கடவுளாகிய விநாயகரின் துணையை வேண்டி முதல் பதிவை தொடங்குகிறேன்.

முதல் பதிவு எழுத முடிவு செய்தவுடன் அம்பிகையை பற்றி தான் எழுத போகிறேன் என்பதில் குழப்பம் இல்லை, ஆனால் நிர்குண ப்ரம்மமாக உருவமற்றவளும், ஸகுண ப்ரம்மமாக பல்வேறு ஸ்வரூபங்கள் எடுத்து பக்தர்கள் துயர் களைந்தவளும், எண்ணற்ற கோயில்களில் வெவ்வேறு பெயர்களுடன் அருளாட்சி புரிபவளுமாக விளங்குபவளை எந்த ரூபத்தில் இருந்து தொடங்வது என்பதில் தான் குழப்பமாக இருந்தது. முடிவாக பக்தி, பராசக்தி, பரப்ரம்மம் என்றால் என்னவென்றே அறியாத வயதில் அவள் மேல் இனம் புரியாத அன்பும், உரிமையும் கொள்ளுமாறு தூண்டிய தயாபரி அன்னை மீனாக்ஷியிடம் இருந்து தொடங்வதே முறை எனப்பட்டது.


எத்தனையோ கோயில்களில் அம்பிகை வரப்ராஸாதியாக பெருமை பெற்று இருந்தபோதிலும், எல்லா கோயில்களும் பெரும்பாலும் ஸ்வாமி பெயராலே அழைக்கபடுகின்றன. உதாரணமாக மயிலை கபாலிச்வரர் கோயில், இராமேஸ்வரம் இராமநாதர் கோயில், தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோயில் இப்படி எத்தனையோ கோயில்களை வரிசை படுத்தலாம். 

காஞ்சியில் காமாக்ஷியம்மன் கோயில் என்று தான் அழைக்கிறோம் என்றாலும் காஞ்சியில் உள்ள 108 சிவாலயங்கலிலும் அம்பாளுக்கு தனி சன்னிதி கிடையாது, அத்தனை சிவாலயங்கலுக்கும் சேர்த்து ஊரின் மத்தியில் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக தனிக்கோயில் நாயகியாக அம்பிகை  கோலோச்சுகிறாள். அது அவளுக்கென்றே உள்ள கோயில், அதனால் அப்படி அழைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 

திருவானைக்கா கோயிலை அகிலாண்டேஸ்வரி கோயில் என்று சிலர் அழைப்பதுண்டு என்றாலும் ஊருக்கே ஜம்புகேஷ்வரம் என்று தான் பெயர்.
அதுமட்டுமா அங்கேயும் ஈஸ்வரனே பிராதானம் என்பதோடு அல்லாமல், தினமும் உச்சி பூஜையை அகிலாண்டேஸ்வரியே ஜம்புகேஷ்வரருக்கு செய்கிறாள்.

மேலும் பல அம்மன் கோயில்களை எடுத்து கொண்டாலும் அது அம்பிகை மட்டுமே அருள் செய்யும் தலங்களாக விளங்குகின்றன. உதாரணமாக  கன்னியாகுமரி, மாரியம்மன் மற்றும் பகவதி கோயில்கள். ஆனால் முழுக்க முழுக்க ஆகம முறைபடி சிவாலயமாகவே அமைந்த கோயிலை அம்மனின் பெயராலே மீனாக்ஷியம்மன் கோயில் என்று அழைக்கும் வழக்கம் மதுரையம்பதியில் தான் நடக்கிறது.


இத்தனைக்கும் மீனாக்ஷியம்மனோடு இருப்பவர் என்ன சாமனியமானவரா என்று பார்த்தால் அவரோ திருஆலவாயில் அம்பிகைக்கு முன்பே கடம்பவனத்தில் எழுந்தருளி தேவேந்திரனின் துயர் களைந்தவர், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு, வளையல் விற்று, தருமிக்கு பொற்கிழி அருளி, நரியை பரியாக்கி, கல் யானையை கரும்பு தின்ன செய்து, அப்பஅப்பா இப்படி
எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர். 

பஞ்சஸபைகளில் வெள்ளியம்பல நடராஜர் இராஜ சேகர பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய ஸ்தலம்.



இந்திரனே அமைத்தது தான் ஸ்வாமியினுடைய விமானம். அஷ்டதிக் பாலகர்ளும் 8 வெள்ளை யானைகளாக ஸ்வாமியினுடைய விமானத்தை தாங்கி நிற்கின்றனர். இன்றும் இரவில் இந்திரன் ஸ்வாமியை பூஜிக்கின்றார். 

சம்பந்தர் திருநீற்று பதிகம் பாடி கூன்பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்து, மீண்டும் இந்த மண்ணில் சைவம் தழைதோங்க காரணமே சோமசுந்தர பெருமான் தான். ஆனால் இத்தனை பெருமைகளையும் ஒன்றுமில்லை என்றாக்கி கொண்டு மதுரையில் இருந்து கொண்டு லோகபரிபாலனம் செய்து கொண்டிருக்கிறாள் அன்னை மீனாக்ஷி.

அதுமட்டும்மா மற்ற எல்லா சிவாலயங்களிலும் ஈஸ்வரனுகே முதலில் நைவேத்தியம் செய்து அந்த பிராசதத்தை அம்பிகைக்கு நைவேத்தியமாக படைப்பர், இங்கு அதிலும் மாற்றம். மீனாக்ஷிக்கே முதல் பூஜை மற்றும் நைவேத்தியம், அதன் பிறகு தான் சொக்கநாதர் பூஜையை ஏற்கிறார்.
பக்தர்களும் அன்னையின் தரிசனம் பெற்ற பிறகே ஈசனை தரிசிகின்றனர்.

எப்படி அம்பிகை இந்த க்ஷேத்திரதில் இவ்வளவு மகிமையோடு இருக்கிறாள் என்று யோசித்தால் பல விடைகள். அதில் முக்கியமான ஒன்று இது மாதங்கி பீடமாகும். மாதங்கி என்னும் ச்யாமளையின் பெருமையை அவள் அருளிருந்தால் அடுத்த பதிவில் என்னால் இயன்ற அளவு எடுத்து கூற முயற்சிக்கிறேன்.

குறிப்பு: இது என்னுடைய முதல் பதிவு, பிழைகள் இருப்பின், தயை கூர்ந்து பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நன்றி!




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை