ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ லலிதையின் சரிதம் !
![]() |
ஸ்ரீ லலிதை |
முன்னொரு காலத்தில் பராசக்தியே தக்ஷனுக்கு மகளாக சதி தேவி என்ற திருநாமத்தோடு அவதரித்தாள். நாரதரின் மூலமாக பராசக்தியே தனக்கு மகளாக பிறந்திருப்பதை அறிந்து கொண்ட தக்ஷன் தேவியை பரமேஸ்வரனுக்கு மணமுடித்து தர மறுத்தான். இதனால் தக்ஷனின் சம்மதமின்றி சதி தேவியை பரமேஸ்வரன் மணமுடித்தார். மேலும் ஒரு சமயம் தேவர்கள் நடத்திய யாகத்திற்கு வந்திருந்த தக்ஷன் சிவன் தன்னை கண்டு எழுந்து வணக்கம் செய்யாததை அவமானமாக கருதினான். இச்சம்பவத்திற்கு பழி தீர்க்க எண்ணிய தக்ஷன் சர்வேஸ்வரனை அவமதித்து யாகமொன்றை நடத்தினான். தன் பதியின் அவமானத்தை துடைக்க எண்ணி சிவனின் வார்த்தையையும் மீறி யாக சாலையை அடைந்த சதி தேவியையும் தக்ஷன் நிந்திக்க, தேவியானவள் யாக குண்டத்தில் இறங்கி உயிர் நீத்தாள். கடும் சினம் கொண்ட ஈஸ்வரன் வீரபத்திரரை தோற்றுவித்து தக்ஷனை வதைத்தார், பின்னர் மனம் அமைதி அடைய கடும் யோகத்தில் ஆழ்ந்தார்.
![]() |
தக்ஷனின் கோபமும் அன்னை சதி உயிர் நீத்தலும் |
வருடங்கள் பல உருண்டோடின, பராசக்தியனவள் பார்வதியாக இமவானுக்கு மகளாக பிறந்து மணப்பருவம் எய்தினாள். மணந்தால் சர்வேஸ்வரனையே மணப்பேன் என்று திட சித்தம் கொண்டு ஈசனை நோக்கி கடும் தவம் இயற்றினாள். பார்வதியின் தவத்தை ஜெயமடைய செய்ய தேவர்கள் அனைவரும் ஈசனின் யோகத்தை கலைக்க மன்மதனை கொண்டு ஈஸ்வரன் மீது மலர் பாணம் எய்ய செய்தனர். தவம் கலைந்த சிவனார் கடும் கோபம் கொண்டு மன்மதனை நெற்றிக்கண் திறந்து எரித்து சாம்பலாக்கினார்.
![]() |
காமதகனம் |
மன்மதனின் சாம்பலை நீரிட்டு பிசைந்து ஒரு உருவம் கொடுத்து உயிரும் கொடுத்தார் பிரம்ம தேவர். சிவனின் கோபாக்னியில் எரிந்த மன்மதனின் சாம்பலில் இருந்து தோன்றியதால் அவன் அசுரனாக வளர்ந்தான். அவனே பண்டாசூரன்!
பல்லாயிரம் வருடங்கள் கடும் தவமியற்றி பிரம்மனின் அருளால் பல வரங்கள் பெற்றான். பெற்ற வரத்தையும் பேராற்றாலையும் தவறாக பயன்ப்படுத்தினான். தேவர்கள் மானிடர்கள் ஏனைய மற்ற ஜீவராசிகள் மீது அளவிட முடியா கொடுமைகளை கட்டவிழ்த்தான். தாங்கொணா துயரடைந்த தேவர்களும் முனிவர்களும் இமயமலையின் அடிவாரத்தில் பல மைல் தூரம் சுற்றளவு கொண்ட யாக குண்டத்தை அமைத்து இதுவரை மூவுலகிலும் நடந்திராத ஒரு பெரும் யாகத்தை தேவியை குறித்து நடத்தினர். இப்பெரும் யாக குண்டமே சிதக்னி குண்டம் என்று அழைக்கபடுகிறது. பக்தர்களின் துயர் பொறுக்காத தேவி யாகத்தீயில் இருந்து ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தரியாக தோன்றினாள். இதன் காரணமாகவே அன்னையை லலிதா சஹஸ்ரநாமம்
சிதக்னி குண்ட சம்பூதா
என்று அழைக்கிறது.
சர்வ லோக மாதாவான தேவி தானே அனைத்திற்கும் மூலம் என்பதை காண்பவர் உடனே அறிந்து கொள்ளும் வகையில் தோன்றினாள். கோடி உதயசூரிய பிரகாசத்துடன், செந்நிற திருமேனியளாய், முக்ண்ணியாய், நான்கு திருகரங்களுடன் முன்னிரு கரங்களில் பஞ்ச புஷ்பபாணமும் கரும்பு வில்லும் தரித்து, பின்னிரு கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தி, பஞ்ச ப்ரும்மாசனத்தில் அமர்ந்தவாறு தோன்றினாள். அதென்ன பஞ்ச ப்ரும்மாசனம்?
அதில் தான் தேவியின் மகிமை புலப்படுகிறது. இந்த பஞ்ச ப்ரும்மாசனத்தின் நான்கு கால்களாக இருப்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மற்றும் மகேஸ்வரர்.
பஞ்ச ப்ரும்மாசனத்தின் மஞ்சமாக விளங்குவது சதாசிவர். இது மட்டுமா அன்னையின் இருபுறமும் மஹாலஷ்மியும் மஹாஸரஸ்வதியும் ஸாமரம் வீசி கொண்டிருகிறார்கள். இந்த ஒரு திருகாட்சியே போதும் இவளே பரப்ரம்மம் என்பதை உணர்த்த.
![]() |
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தரி |
யாக குண்டத்தில் உதித்த தேவி தானே நேராக சென்று பண்டாசூரனை வதைத்திருக்கலாம். ஆனால் உலக இயக்கத்திற்கு எப்படி சிவசக்தி இருவரும் முக்கியம் என்பதை உணர்த்த அன்னை ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாய் எழுந்தருள பரமேஸ்வரன் சர்வாலங்காரத்துடன் காமேஸ்வரராய் தோன்றி மணமுடித்தார்.
![]() |
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி |
இவ்வாறு சர்வேஸ்வரரை மணமுடித்த தேவி ஸ்ரீசக்ர ரதத்தில் ஏறி சேனைத்தலைவியாய் மஹாவாராஹியும் , மஹாமந்திரியாய் ராஜஸ்யாமலையும் உடன் வர நொடிபொழுதில் லட்சம் சக்தி சேனையை உண்டாக்கி ஈசனின் அஸ்திரமான மகாபாசுபதாஸ்த்திரத்தை கொண்டு பண்டனை வதைத்தாள். தன் அன்னைக்கு துணையாக மஹாகணபதி போரில் உதவியதும், அன்னை பண்டனின் 30 புதல்வர்களை பாலாவாக வதைத்ததும் , விசுக்ரனை மஹாவாராஹி கொன்றொழித்ததும் இன்னும் பல லீலைகளும் தனித்தனி பதிவுகளாயிடும் அளவுக்கு விஷயம் நிறைந்தவை.
லலிதம் என்றால் ஆனந்தம். வானவர் மற்றும் தானவர் துயர்க்களைந்து ஆனந்தம் வழங்கியதால் லலிதை. ப்ரஹ்மானந்த ஸ்வரூபிணியாக விளங்குவதாலும் லலிதை. இவளின் பெருமையை 18 புராணங்களில் ஒன்றான ப்ருமாண்ட புராணத்தில் வரும் லலிதோபாக்கியானம் விரிவாக பேசுகிறது.
![]() |
ஸ்ரீபுரம் |
இவள் வசிக்கும் இடமே ஸ்ரீபுரம் ஆகும். இந்த ஸ்ரீபுரமானது அம்ரித கடலின் நடுவே உள்ள தீவு நகரமாகும். எண்ணற்ற நவரத்தின மாடங்களும் கூடங்களும் கற்பனைக்கு எட்டாத அழகும் நிறைந்தது ஸ்ரீபுரம். இந்த ஸ்ரீபுரத்தின் உள்ளே சிந்தாமணி க்ருஹத்தினுள் பஞ்ச ப்ரும்மாசனத்தின் மீதமர்ந்து லோகபரிபாலனம் செய்கிறாள் பரதேவதை. இவள் வசிக்கும் ஸ்ரீபுரத்தின் வடிவமே ஸ்ரீசக்ரம் ஆகும்.
![]() |
ஸ்ரீசக்ரம் |
வாக்கு மனம் சிந்தனை இவையனைதிற்க்கும் எட்டாத அழகுடன் ஸ்ரீபுரம் விளங்குகிறது. தேவியின் உபாசகர்கள் இறுதியில் ஸ்ரீபுரத்தை அடைந்து அன்னையின் திருவடி நிழலில் இளைபாறுகிறார்கள். இந்த அன்னையின் அருளின்றி இவளின் பெருமையை கேட்கவோ படிக்கவோ இயலாது என்பது தேவி உபாசகர்களின் நம்பிக்கை. எனவே லலிதையின் பெருமையினை சிறுதுளியாய் விவரிக்கும் இப்பதிவை படிப்பவர்கள் அனைவரும் பரதேவதையின் கடாக்ஷம் பெற்றவரே !
லலிதம் என்றால் எப்போழுதும் ஆனந்தம். அருமையான தமிழ்நடை.
பதிலளிநீக்கு